ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்; தேச நலனுக்கு முக்கியம் என மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த கேள்விக்கு, ”தேசிய நலனை அடிப்படையாக கொண்டு கொள்முதல் செய்யப்படுகிறது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த மோதல் துவங்கிய 2022 முதல், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ‘குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான எரிசக்தியை பெறும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது’ என, மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது அல்லது வாங்காமல் இருப்பது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவராது. பேச்சு வாயிலாகவே மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும்,” என, கூறினார். இது குறித்து டில்லியில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பதில்:

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பொறுத்தவரை, எங்கு இருந்து பெறுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தேசிய நலனை அடிப்படையாக கொண்டு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது. 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் கொள்கை அதன் தேசிய நலனை உறுதியாக அடிப்படையாகக் கொண்டது. எரிசக்தி பொருட்கள் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கிடைக்க வேண்டிய கட்டாயமே எங்களை வழிநடத்துகிறது. அதுவே, தொடர்ந்து எங்கள் கொள்கையாக இருக்கும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Source link