ராஜீவ் காந்தியுடன் காதல் கொண்டது எப்படி?; சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த சோனியா காந்தி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் காதல் கொண்டது எப்படி என்ற சுவாரஸ்ய தகவலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சோனியா காந்தி பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் முதன்முறையாக கணக்குத் தொடங்கிய சோனியா காந்தி, நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் தனது சுயசரிதை நூலான, ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) குறித்து வீடியோ மூலம் பேசியுள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் எப்படி காதல் ஏற்பட்டது, அவருடனான தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பழைய புகைப்படங்கள் வாயிலாக என விவரித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “கேம்பிரிட்ஜில் இருந்த ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் எனது காதல் பயணம் தொடங்கியது. 1965ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் இருந்த ஒரு கிரேக்க உணவகத்தில் தான் ராஜீவ் காந்தியை சந்தித்தேன். அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் நல்ல உணவகங்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. அப்போது உணவகங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இறுதியில் இந்திய மற்றும் இத்தாலிய மாணவர்கள் அடிக்கடி செல்லும் ஒரு கிரேக்க உணவகத்தைக் கண்டறிந்தேன். அதே உணவகத்தில்தான் நான் ராஜீவைச் சந்தித்தேன். அவரை முதன்முதலில் பார்த்தபோதே, அவருடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று உணர்ந்தேன். அவருக்கும் அதே உணர்வுதான் இருந்தது என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன். ஒரு பொதுவான நண்பர் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு நாங்கள் நண்பர்களானோம். நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளுக்குச் செல்வோம். அவர் மிகவும் மென்மையான தோற்றம் கொண்டவராக இருந்தார்.

அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார், அவரிடம் மென்மையான குணம் வெளிப்பட்டது. அதுதான் என் மனதைத் தொட்டது, என்னைக் கவர்ந்தது. அவரை முதன்முதலில் சந்தித்த அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கினோம். அந்த உலகத்தை நவம்பர் 10-ஆம் தேதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.