ராஜ்யசபாவில் கட்சி தலைவரை காணோம்: ஆம் ஆத்மியை கேலி செய்த ராகவ் சத்தா

புதுடில்லி: ஆம் ஆத்மி ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் எம்.பி., ராகவ் சத்தா, சபையில் தன் கட்சித் தலைவர்கள் இல்லாததை கிண்டல் செய்தார்.

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு அக்கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த நிலையில், சமீபத்தில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பதவிக்கு, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அசோக் குமார் மிட்டல் நியமிக்கப்பட்டார்.

ராஜ்யசபாவில் மக்கள் பிரச்னைகளை எழுப்பவில்லை என்றும், மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ராகவ் சத்தா மீது ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இதை அவர் மறுத்தார். இது தொடர்பாக, ராகவ் சத்தாவுக்கும், ஆம் ஆத்மி தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் நடக்கிறது.

சமீபத்தில், ராகவ் சத்தாவுக்கு வழங்கி வந்த, ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்ப பெற்றது. உடனே அவருக்கு, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் ராகவ் சத்தா பேசிய போது, ஆம் ஆத்மி ராஜ்யசபா தலைவர் சஞ்சய் சிங், துணைத் தலைவர் அசோக் குமார் மிட்டல் ஆகியோர் சபையில் இல்லை.

இதை கிண்டல் செய்து ராகவ் சத்தா பேசுகையில், ”நான் சார்ந்த கட்சியின் தலைவர் சபையில் இல்லை. புதிய துணைத் தலைவரும் இல்லை. ஆனால், துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நான் மட்டும் இங்கே இருக்கிறேன். எனக்கு பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி,” என்றார்.

ராகவ் சத்தா – ஆம் ஆத்மி தலைவர்கள் இடையே நாளுக்கு நாள் கருத்து மோதல் அதிகரித்து வருவது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link