வாஷிங்டன்: ‛மிகப்பெரிய ராணுவ பலம் வாய்ந்த ரஷ்யா உடனான சண்டையை முடிக்க, உக்ரைனுக்கு எண்ணம் வந்து இறங்கி வர வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிடிவாதமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ரஷ்யா மிகப்பெரும் ராணுவ பலம் கொண்ட நாடு. போரை நிறுத்த சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம், உக்ரைன் தரப்பில்தான் முதலில் வர வேண்டும். ரஷ்ய அதிபர் புடின் சமரசத்திற்குத் தயாராக இருந்தாலும், ஜெலன்ஸ்கி பிடிவாதம் பிடிப்பது, போரை மேலும் நீட்டிக்கவே செய்யும். புடின் – ஜெலன்ஸ்கி இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட பகைமை, அமைதி பேச்சுவார்த்தைக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
வீணாகும் வரிப்பணம்:
உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பில்லியன் கணக்கிலான டாலர்களையும், ஆயுதங்களையும் வாரி இறைப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அமெரிக்க மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. உக்ரைனுக்கு தேவையில்லாத நிதியுதவிகளை நிறுத்தி, இரு நாடுகளையும் உடனடியாக சமரச பேச்சுக்குக் கொண்டுவந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கம். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
