ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!

Summary

ஐதராபாத் செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட நபர் யார்?

கைது செய்யப்பட்ட நபர் 20 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ஹவில்தாராகப் பணியாற்றிய உப்புதொல்லா மல்லேஷ் (37) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 30 அன்று ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனக்கு வழங்கப்பட்ட முன்கூட்டிய ஓய்வு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் திருட்டுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துணிகர திருட்டு மற்றும் கடத்தல்

ஓய்வு பெற்று சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் மல்லேஷ் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளார்.

ராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து ஆயுதங்களை சூறையாடியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

திருடப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்

4 AK-203 ரக துப்பாக்கிகள்,1 இன்சாஸ் ரக துப்பாக்கி, 7 பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் நிரப்பும் மேகசின்கள், 1 இரவு நேரக் கண்காணிப்பு பைனாகுலர் போன்ற சுமார் 1,900 ரவுண்ட் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.

போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற தருணம்

தெலங்கானா டிஜிபி சி.வி. ஆனந்த் இதுகுறித்துத் தெரிவிக்கையில், மல்லேஷ் ஆயுதங்களைத் திருடிவிட்டு அதிகாலை 4:34 மணியளவில் பாலாஜி நகரிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பின்னர், தனக்குச் சொந்தமான வெள்ளை நிற பிரெஸ்ஸா காரில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அச்சம்பேட்டை நோக்கிப் புறப்பட்டார்.

போலீசாரின் சோதனச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளை தவிர்ப்பதற்காக அவர் ஸ்ரீசைலம் சாலையைப் பயன்படுத்தாமல், வெளிவட்டச் சாலை, சாகர் ரிங் ரோடு மற்றும் பெங்களூரு கேட் சாலை வழியாகப் பயணித்துள்ளார்.

காரில் பயணிகளை ஏற்றி நாடகம்

ராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மல்லேஷ் தனது காரை வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்தத் திருட்டுப் பயணத்தின் போது, போலீசாருக்குத் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், தான் வேறு வேலைக்காகத் தான் அச்சம்பேட்டை சென்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் வழியில் பயணிகளை காரில் ஏற்றியுள்ளார்.

சாகர் ரிங் ரோடு டாக்ஸி பாயிண்ட் அருகே 4 பயணிகளை ஏற்றி தேவராக்கொண்டாவில் இறக்கிவிட்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து திண்டி பகுதியில் மேலும் 2 பயணிகளை ஏற்றி இறக்கியுள்ளார். ஆகஸ்ட் 31 மதியம் 1:15 மணியளவில் அவர் அச்சம்பேட்டையை சென்றடைந்துள்ளார்.

சிக்கியது எப்படி? ஆயுதங்கள் மீட்பு!

மல்லேஷ் மீது போலீசாருக்குச் சந்தேகம் வலுத்ததை அடுத்து, பயந்துபோன அவர் செப்டம்பர் 6 அன்று ஆயுதங்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் செப்டம்பர் 10 அன்று மல்லேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஐதராபாத் டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் மற்றும் டிசிபி தலைமையிலான குழுவினர், திருடப்பட்ட அனைத்து AK-203 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் மற்றும் 1,900 தோட்டாக்கள் அடங்கிய ஒட்டுமொத்த ஆயுதக் குவியலையும் பத்திரமாக மீட்டனர்.

இந்தத் திருட்டின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link