ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பொட்டிதட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி குமார். இவர் தன்னுடைய மனைவி சங்கீதாவை அடித்துக் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக பரமக்குடி தாலுகா போலீசார் சிறையில் இருந்து திருப்பதி குமாரை ஆக.,29ல் ராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும், ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கைதி கூறியதை தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து எஸ்.ஐ., தினகரன் தலைமையிலான போலீசார் திருப்பதி குமாரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை முடிந்து மீண்டும் அவரை சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர்.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது திருப்பதி குமார் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி திருப்பதி குமாரை தேடி வருகின்றனர். ஆனால் கைதி தப்பி ஓடி 5 நாட்கள் ஆகியும் இதுவரை கைதியை பிடிக்க முடியவில்லை. கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தப்பி ஓடிய கைதி திருப்பதி குமார் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கைதியை தப்ப விட்ட பரமக்குடி ஸ்டேஷன் எஸ்.ஐ., தினகரன், ஏட்டு நீலாதேவி ஆகியோரை எஸ்.பி. சந்தீஷ் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.
