முதலீட்டில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாதவர்களுக்கு, அரசு ஆதரவு பெற்ற திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான மற்றும் சரியான முடிவாகும். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – MIS) பாதுகாப்பான முறையில் வழக்கமான வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இத்திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவுடன், அதற்கான வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் தனி நபர் கணக்கு அல்லது கூட்டுக்கணக்கைத் தொடங்கலாம். கணவன்-மனைவி அல்லது மூன்று பேர் இணைந்து ஒரு கூட்டுக்கணக்கை (Joint Account) பராமரிக்கும் பட்சத்தில், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் கூட்டாக 4 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி மாதத்திற்கு சுமார் 2,500 ரூபாய் வரை வட்டியாகப் பெற முடியும். பணத்தை டெபாசிட் செய்த அடுத்த மாதத்திலிருந்தே இந்த நிலையான மாத வருமானம் கிடைக்கத் தொடங்குவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
3 லட்ச ரூபாய் முதலீட்டிற்கான கணக்கீடு
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் ரூ.3 லட்சத்தை முதலீடு செய்தால், தற்போது நடைமுறையில் உள்ள 7.4 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தின்படி மாதம் தோறும் சுமார் ரூ.1,850 வட்டியைப் பெறலாம். இதன் மூலம், ஓராண்டில் கிடைக்கும் மொத்த வட்டித் தொகை சுமார் ரூ.22,200 ஆக இருக்கும்.
இத்தொகை தவறாமல் ஒவ்வொரு மாதமும் அதனுடன் இணைக்கப்பட்ட உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் முதிவுக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, உங்கள் அசல் முதலீடான ரூ.3 லட்சமும் எந்தவித பிடித்தமும் இன்றி முழுமையாக உங்கள் கைக்குத் திரும்பக் கிடைக்கும்.
கணக்கைத் தொடங்கும் முறை
அஞ்சலகத்தின் இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கைத் தொடங்க, அருகில் உள்ள அஞ்சலகத்தில் உங்களின் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள், புதிய கணக்கை எளிதாகத் தொடங்கலாம். இத்திட்டத்தின் மொத்த கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும்.
இக்காலகட்டத்தில், இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் மாதந்தோறும் வட்டி வரவு வைக்கப்படும். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு அசல் தொகையைத் திரும்பப் பெறலாம். இருப்பினும், திட்டக் காலம் முடிவதற்கு முன்பாகவே பணத்தை அவசரமாகத் திரும்பப் பெற நேர்ந்தால், அதற்குரிய சில குறிப்பிட்ட நிபந்தனைகள் பொருந்தும்.
போஸ்ட் ஆபிஸின் இந்தத் திட்டம் முழுமையாக மத்திய அரசு அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் முதலீடு செய்யும் பணத்தின் பாதுகாப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் உண்டு. பல தனியார் மற்றும் வணிக வங்கித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதில் மூலதன இழப்புக்கான இடர் மிகவும் குறைவு. அதே சமயம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப லாபம் மாறாமல் நிலையான வருவாய் கிடைக்கிறது. உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ தொடர்ச்சியான மாத வருமானம் அவசியத் தேவையாக இருந்தால், இந்தத் திட்டம் மிகச் சிறந்த பலனைத் தரும்.
யார் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்?
ஓய்வுபெற்ற பிறகு மாதாந்திர செலவுகளுக்குச் சீரான வருமானம் பெற விரும்புபவர்களுக்கும், தங்களது கடின உழைப்பின் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் பங்குச்சந்தை போன்ற இடங்களில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் (MIS) திட்டத்தைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். எனினும், இறுதி முடிவெடுப்பதற்கு முன் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்திற்கு நேரில் சென்று, தற்போதைய அதிகாரப்பூர்வ விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்வது நல்லது.
