ஜான்சி: ஜான்சியில் ரீல்ஸ் வீடியோவுக்காக 30 அடி உயர அணையில் இருந்து குதித்த வாலிபர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சியில் பகுஜ் என்ற அணை உள்ளது. இந்த அணைக்கு புஷ்பேந்திரா என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அணையின் 30 அடி உயர பகுதியில் இருந்து ரீல்ஸ் வீடியோவுக்காக கீழே குதித்துள்ளார்.
இவரின் ரீஸ்ல் சாகசத்தை உடன் வந்த நண்பர்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர். 30 அடி உயரத்தில் இருந்து குதித்த புஷ்பேந்திரா, மேலே எழும்பி வராமல் தண்ணீருக்குள்ளே மிதந்துள்ளார். ஆழமற்ற பகுதியில் அவர் குதித்ததால் கால்கள் பாறையில் மோதி உடைந்தன. இதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை, அனைவரும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் புஷ்பேந்திராவின் ஒரு காலில் கம்பிகள் பொருத்தினர். மற்றொரு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த ரீல்ஸ் தொடர்பான சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
