ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர் கைது

சென்னை: ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக, கட்டுமான நிறுவன உரிமையாளரிடம், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாம்பரம் வணிக வரித்துறை உதவி கமிஷனர் ஜமுனா, 40, கைது செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த வண்டலுாரை சேர்ந்தவர் சிவகுமார். இவர், ‘கலைமணி அசோஷியேட்ஸ்’ என்ற பெயரில், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கு, ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக, தாம்பரம் வணிக வரி அலுவலகத்தில் இருந்து, அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தன் நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் முரண்பாடுகள் இருப்பதாக, சம்பந்தப்பட்ட வணிக வரி அலுவலகத்திற்கு சென்று, விளக்கம் அளித்துள்ளார். அதை ஏற்று, உரிய வகையில் ஜி.எஸ்.டி., வரி தொடர்பாக அறிவிப்பு வெளியிட, இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி, சிவகுமாரிடம் தாம்பரம் வணிக வரி அலுவலக உதவி கமிஷனர் ஜமுனா கேட்டுள்ளார். அதன்பின், 1.75 லட்சம் ரூபாயாவது தாருங்கள் என கேட்டுள்ளார்.

இதுகுறித்து சிவகுமார், சென்னை ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, ஜமுனாவின் நடவடிக்கைகளை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று இரவு, தாம்பரத்தில் சிவக்குமாரை தன் காரில் ஏறச்சொல்லி, ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், ஜமுனா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர், டி.என்.பி.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று, வணிக வரித்துறையில் பணியில் சேர்ந்தவர்.

Source link