புதுடில்லி: டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
இதில், நம் முப்படைகளின் போர்த்திறனை வலுப்படுத்த, 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ராணுவ அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: அணுசக்தி பாதிப்புகளை கண்டறியும் வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி அமைப்புகள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.
கடற்படை விமான நிலையங்களில் உள்ள பழைய ரேடார்களுக்கு பதிலாக, ‘ஆருத்ரா’ ரேடார்கள் நிறுவப்படவுள்ளன.
மொத்த கொள்முதலில், ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
