ரூ.25 கோடி கோவில் நிலம் கபளீகரம் : 99 தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம்

– நமது நிருபர் –

சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிராமத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா அடுத்த புதுவயல் கிராமத்தில், 150 ஆண்டுகள் பழமையான, கைலாச விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.34 ஏக்கர் நிலம், கிரய பத்திரமே இல்லாமல், 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:இந்த கோவிலுக்கு சொந்தமான, குறிப்பிட்ட பட்டா மற்றும் புல எண்ணில், 6.34 ஏக்கர் நிலம் இருந்தது. 2022 ஜன., 27ம் தேதி, ஒரே நேரத்தில், 99 நபர்கள் தாசில்தாருக்கு மனு அளித்துள்ளனர்.எந்தவொரு செல்லத்தக்க கிரய பத்திரமோ, உரிமை ஆவணமோ இல்லாத நிலையில், ஒருமாத இடைவெளியில், மனு அளித்த அனைவருக்கும் பிப்., 27ல் ஒரே நேரத்தில் கோவில் நிலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டு, உட்பிரிவும் செய்யப்பட்டுள்ளது.

நிலங்கள் பல மனைகளாக பிரிக்கப்பட்டு, பெரும்பாலான பகுதி தனி நபர்களின் பெயர்களுக்கு போக, சிறிய பகுதி மட்டுமே கோவில் பெயரில் விடப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு, 25 கோடி ரூபாய். பட்டா மாற்றம் செய்யப்பட்ட கோவில் நிலத்தில், தற்போது சில முஸ்லிம்கள் வீடு கட்டி குடியேறி உள்ளனர். இந்த முறைகேடுகள் முறியடிக்கப்பட வேண்டும். முறைகேடாக செய்யப்பட்ட பட்டா மாற்றத்தை ரத்து செய்து, கோவில் பெயரில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Source link