ரூ.6,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேன், ஊர் நல அலுவலர்கள் கைது

– நமது நிருபர்-

தென்காசியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி மற்றும் சாத்தூரில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். கலப்புத் திருமணம் செய்தவர். இதற்காக, அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் 4 கிராம் தங்கத்தை பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார். அதனை அரசுக்கு அனுப்புவதற்கு சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கொடி மற்றும் ஊர் நல அலுவலர் சகுந்தலா ஆகியோர் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர்.

இதனை கொடுக்க விரும்பாத தாமரைக்கண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை தாமரைக்கண்ணன் சகுந்தலாவிடம் கொடுத்தார். அவர், அந்த பணத்தை பூங்கொடியிடம் அளித்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லைன்மேன்

தென்காசியில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேன் விஜயை 39, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link