சென்னை: திமுக ஆட்சியில் இருந்த போது 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியிருக்கிறார்கள் என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று அதில் உள்ளது என்று முதல்வர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது:
கடைசி வாரம் பேசும் போது என் மேசையில் 3 துறை பைல் இருக்கிறது, அதனை எப்பொழுது ஓபன் பண்ண வேண்டுமோ, அப்பொழுது ஓபன் பண்ணுகிறேன் என்று சொன்னேன், உடனே எதிர்க்கட்சியினர் சவால் விடுத்தனர், அதனை ஓபன் செய்வதற்கு முன் தற்போது ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போம்.
* 1970களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷன் தருமாறு கருணாநிதி மருமகன் கமிஷன் கேட்டுள்ளார்.
* கட்சி நிதி என்ற பெயரில் ஆட்சியில் திமுக இருந்த போது வாங்கியது. ஸ்டாலின், உதயநிதி மூலம் பெற்றனர் என்றும் அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் லஞ்சமாக பெற்றனர்; பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றனர்.
* தப்பில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்பவர்கள் திமுக; திமுக இருக்கும் இடத்தில் தப்பே நடக்கும், தப்பு நடக்கும் இடத்தில் திமுக இருக்கும்.
* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.
* கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளன.
* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?
* திமுக ஆட்சியில் திமுகவினர் தொடர்புடைய குற்றங்களில் எப்ஐஆர் பதிவு செய்வதில் கூட தாமதம் செய்யப்பட்டது.
* பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகர், மனைவி மீது நடவடிக்கை இல்லை.
* கடலுார் திமுக எம்.பி., ரமேஷ் ஆலையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கடுமையான கண்டனம் எழுந்தபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்ணாடியை பாருங்க!
தவெகவினர் தவறு செய்தாலும் பாரபட்சம் இன்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திமுக ஆட்சியில் திமுகவினர் அனுமதி பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றங்களில் தொடர்புடைய பலர், திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டனர். சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி பேசும் முன் திமுகவினர் கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும்; திமுக செய்த தவறுகளை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழக மக்களின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
