கோவை: லஞ்சம், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பட்டியலை, உளவுத்துறை மூலமாக த.வெ.க., அரசு சேகரிக்கிறது.
‘அரசு சேவை பெற லஞ்சம் தர வேண்டியதில்லை; கட்சி நிதியும் கொடுக்க தேவையில்லை’ என, முதல்வர் விஜய் அறிவித்தார். யாரேனும் லஞ்சம் கேட்டால், தகவல் தெரிவிக்க, ‘வாட்ஸாப்’ எண் வெளியிட்டுள்ளார். அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்; விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அறிவிப்புக்கு பின், அரசு அலுவலர்களிடம் பயம் ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குறைந்திருக்கிறது. கட்சி நிதி வசூலிப்பதில்லை. இருப்பினும், லஞ்சம் கேட்டு அழுத்தம் கொடுப்பதில்லை. விருப்பப்பட்டு கொடுங்க என்று கூறி, கொடுப்பதை பெற்றுக்கொள்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் பணம் கொடுத்து பதவி பெற்று வந்த அதிகாரிகள், அத்தொகையை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில், கீழ்நிலை ஊழியர்களை லஞ்சம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு வெளியூரில் இருந்து அயல்பணியாக வருவாய்த்துறையில் இருந்து வந்துள்ள அதிகாரிகள், வரி வசூலர்களுக்கு ‘டார்கெட்’ நிர்ணயித்து, லஞ்சம் வசூல் செய்து தரச்சொல்லி நிர்பந்திக்கின்றனர்.
உயரதிகாரிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், செகஷன் மாறிச்செல்ல முயற்சித்து வருகின்றனர்.
நகர ஊரமைப்பு துறையில் லஞ்சம் எல்லை மீறிச்செல்கிறது. இதற்கு, முன்பணமாக வாங்கிய அதிகாரிகள், இப்போது நகையாக வாங்கும் புதுப்பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். பத்திரப்பதிவு துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, நில அளவைத்துறை, மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தொடர்கிறது. முதல்வர் அறிவித்த வாட்ஸாப் எண்ணுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் உட்பட எந்தெந்த அரசு அலுவலகங்களில் யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழலில் திளைப்பது யார், எத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள் என்கிற விபரங்களை சேகரித்து அனுப்ப, உளவுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கைபடி, துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதலோ செய்யப்படலாம் என்பதால், அதிகாரிகள் பீதியில் இருக்கின்றனர்.
