புதுடில்லி: வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்த கொள்கையின் அடித்தளமாக இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய ஒட்டு மொத்த அரசு என்ற ரீதியில் அணுக வேண்டும். வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு, மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இதற்கு அடித்தளமாக இளைஞர்கள் இருக்க வேண்டும். அனைத்து சீர்திருத்தங்களிலும் குடி மக்களின் நலனே முக்கியமானதாக எப்போதும் இருக்கும்.
மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படும் சீர்திருத்தங்கள் உண்மையான உத்வேகம் பெற வேண்டும். அர்த்தமுள்ள மாற்றத்தை வழங்க வேண்டும். சீர்திருத்தங்களின் நோக்கம் என்பது அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்ல, இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயணத்தை விரைவுபடுத்துவதற்கே.
அரசு அமைப்புகள் விரைவான மாற்றங்களை சந்தித்து வருகின்றன. நிர்வாக செயல்முறைகளை வடிவமைப்பதுடன் அதனை வலுப்படுத்தி மாறி வரும் சூழலின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உருவாகி வரும் தேவைகளை விரிவாகப் பட்டியலிட வேண்டும்.
இளைஞர்கள் மத்தியில் நிலவும் போதைப்பொருள் விவகாரத்தை தீவிரமான பிரச்னையாக கையாள வேண்டும். இளைஞர்கள் மையமாகக் கொண்ட முன்னெடுப்புகளை துறைகளுக்கு இடையே ஒருங்கிணைக்க வேண்டும். விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.
விளையாட்டு சுற்றுலா, கவனத்தை பெற்று வருகிறது. இதனால், உலகளாவிய விளையாட்டு மையமாக நிலைநிறுத்த, முக்கியமான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்த முனைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
