லண்டன்: லண்டனில் நடைபெறும் பிரபல கார் பந்தயத்தை முதல்வர் விஜய் துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக முதல்முறையாக இன்று வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். இன்றிரவு 10 மணிக்கு புறப்படும் அவர், துபாய் சென்று, பிறகு அங்கிருந்து வேறு விமானத்தில் நாளை லண்டன் சென்றடைய உள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தனது 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில், இவ்வார இறுதியில் லண்டனில் நடக்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் பங்கேற்கிறார். அன்றைய போட்டியை பச்சை கொடியசைத்து முதல்வர் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக லீ மான்ஸ் கப் (Le Mans cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஆட்டோமொபைல் கிளப் டி எல் ஓவெஸ்ட்’ என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தக் கார்ப்பந்தமானது, சர்வதேச அளவில் பிரபலமானதாகும். இதில், மொத்தம் 44 அணிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். தற்போது, லண்டனில் நடக்கும் இந்தக் கார் பந்தயத்தை பார்வையிடும் அவர், அங்குள்ள சர்வதேச தரத்தினால் ஆன உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிடுகிறார்.
