திருச்சி: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணமும் சர்ச்சையாகியுள்ளது. தொழில் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று லண்டன் சென்ற விஜய் எப்படி ஈர்க்கிறார் என்பதை நீங்களே பாருங்கள். பத்திரிகையில் வந்துள்ள போட்டோ யாருடையது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விலைவாசி விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்துவிட்டது. எல்லா உணவு பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அதைப்பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. இன்றைக்கு முதலமைச்சர் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். வந்தவுடனே வெளிநாடு செல்கிறார் பரவாயில்லை என நினைத்தேன்.
தொழில் முதலீட்டை ஈர்த்து தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். இன்றைக்கு பத்திரிகையில் பார்த்தபோது போட்டோ மாறி வந்துள்ளது. யாரோட போட்டோ என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தொழில் முதலீட்டை எப்படி ஈர்க்கிறார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல இன்றைக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதை சீர் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.
அதைப்பற்றியும் கவலை இல்லை. 2011 ஆம் ஆண்டே அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் போது கடுமையான மின்வெட்டு நிலவியது. நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றே வருடங்களில் மின் தடையில்லாத மாநிலமாக உருவாக்குவோம் என்று கூறினார். சொன்னபடியே மூன்றே தடையில்லாத மின்சாரத்தை கொடுத்தார். எது தேவையோ இல்லையோ, மின்சாரம் 100 சதவிகிதம் தேவை. மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. ஒரு மணிநேரம் மின்சாரம் தடைபட்டால் தூக்கம் போய்விடும்.
மின்சாரம் இன்றியமையாதது. அதிமுக ஆட்சியில் இருந்தவரை தடையற்ற முறையான மின் விநியோகம் இருந்தது. விவசாயிகளுக்கு 24 மணி நேரம் தடையில்லாத மும்முனை மின்சாரம் கொடுத்தோம். எப்போது சென்றாலும் பம்ப் செட் ஆன் செய்யும் வகையில் இருந்தது. இன்றைக்கு எங்கே பார்த்தலும் மின் வெட்டு, மக்கள் போராட்டம் நிலவுகிறது. 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி என்று கூறினர்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு பாதி கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். விவசாயிகள் நம்பினார்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி என்று அறிவித்துள்ளனர். அதுவும் ஒரு லட்சம் வாங்கியிருந்தால் தான் 75,000 தள்ளுபடி. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கினால் அவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தவெக நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் கொதித்து போய் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு இது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் நேரடியாக கொள்முதல் செய்யவில்லை. அதனால் அது டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக நெல் முளைத்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
