கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில், தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று (23-10-26) வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதில், கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
