வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் உயிர் சான்றிதழை (Digital Life Certificate) வீட்டிலிருந்தபடியே எளிதாகச் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த உயிர் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் கடைசியாகச் சான்றிதழ் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஜீவன் பிரமாண் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தொடர்ந்து ஓய்வூதியம் பெற நடப்பாண்டில் அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகும் சமர்ப்பிக்கலாம், ஆனால் அவ்வாறு செய்தால் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும்.
அஞ்சல் துறை (IPPB) மூலம் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கும் முறை:
வங்கி அல்லது அலுவலகத்திற்குச் செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) வீட்டு வாசக சேவையை வழங்குகிறது.
எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தபால்காரர் அல்லது கிராம அஞ்சல் சேவகர் உதவியுடன் இந்தச் சேவையைப் பெறலாம். இச்சேவை போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு (IPPB) வைத்துள்ளவர்களுக்கும், கணக்கு இல்லாதவர்களுக்கும் கூட கிடைக்கப்பெறும்.
இந்த வசதியைப் பெற, அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது தபால்காரர் வீட்டிற்கு வர கோரிக்கை விடுக்கலாம். மேலும், போஸ்ட் ஆபிஸ் வீட்டு வாசல் வங்கிச் சேவைக்கு 033-22029000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டும் முன்பதிவு செய்யலாம்.
பயோமெட்ரிக் அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், ஒரு ‘பிரமாண் ஐடி’ (Pramaan ID) உருவாக்கப்படும்.
டிஜிட்டல் உயிர் சான்றிதழ் என்றால் என்ன?
ஜீவன் பிரமாண் எனப்படும் டிஜிட்டல் உயிர் சான்றிதழ் என்பது, ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை நேரில் சென்று நிருபிக்கத் தேவையில்லாமல், கைரேகை அல்லது முகம் மூலம் பயோமெட்ரிக் முறையில் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதியாகும்.
தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள்:
- பதிவு செய்யப்பட்ட ஆதார் எண்
- பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்
- ஓய்வூதிய வகை
- ஓய்வூதிய அனுமதி வழங்கும் அதிகாரியின் பெயர்
- ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் அல்லது வங்கியின் பெயர்
- ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை (PPO) எண்
- ஓய்வூதிய கணக்கு எண்
(குறிப்பு: உங்கள் ஆதார் எண் ஏற்கனவே ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தில் அல்லது வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்).
மொபைல் செயலி மூலம் ஃபேஸ் ஆதெண்டிகேஷன் (Face Authentication) ஆன்லைனில் சமர்ப்பிக்கும் 6 எளிய படிகள்:
படி 1: 5 மெகாபிக்சல் (MP) முன் கேமரா மற்றும் இணைய வசதி கொண்ட எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் பயன்படுத்தவும்.
படி 2: ஓய்வூதிய வழங்கும் அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்ட உங்கள் ஆதார் எண்ணைத் தயாராக வைத்திருக்கவும்.
படி 3: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘AadhaarFaceRD’ மற்றும் ‘Jeevan Pramaan Face App’ ஆகிய இரண்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
படி 4: செயலியில் ஆபரேட்டர் அங்கீகாரத்தை முடித்து, ஆபரேட்டரின் முகத்தை ஸ்கேன் செய்யவும் (ஓய்வூதியதாரரே ஆபரேட்டராகச் செயல்படலாம்).
படி 5: செயலியில் கேட்கப்படும் ஓய்வூதியதாரரின் விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.
படி 6: ஸ்மார்ட்போனின் முன் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் முகத்தின் தெளிவான புகைப்படத்தைப் பிடித்து சமர்ப்பிக்கவும்.
இந்த நடைமுறை வெற்றிகரமாக முடிந்ததும், ஜீவன் பிரமாணைப் பதிவிறக்குவதற்கான இணைப்புடன் கூடிய எஸ்.எம்.எஸ். உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். இந்த டிஜிட்டல் உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். உமாங் செயலி மூலமாகவும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
