வங்கி மேலாளர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட மு.க.அழகிரியின் மகள்; போலீசார் அதிரடி நடவடிக்கை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள், வங்கி மேலாளர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனான மு.க.அழகிரி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவரின் மகள் கயல்விழிக்கு, சென்னை அடையாறில் சொந்தமாக கட்டிடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில், எஸ்.பி.ஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் அந்த வங்கி கிளையில் உள்ள மின்தூக்கி (Lift) அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கயல்விழியின் பிரதிநிதியிடம், வங்கியின் மேலாளராக பொறுப்பு வகித்து வரும் அர்ஜுன் சிங் என்பவர் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார். ஆனால் அவர் இது குறித்து முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் வங்கி மேலாளர் அர்ஜூன் சிங், கயல்விழியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கயல்விழி, நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று வங்கி மேலாளர் அர்ஜூன் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கயல்விழி பேசும் போது, அர்ஜூன் சிங் கன்னத்தில் கை வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். இதில் கோபத்தில் உச்சிக்கே சென்ற கயல்விழி, நான் பேசும் போது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்த்திருக்கலாமா எனக் கூறி அர்ஜூன் சிங்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கயல்விழி தன்னை அறைந்தது தொடர்பான சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் வங்கி மேலாளர் அர்ஜூன் சிங் சென்னை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளர் அர்ஜூன் சிங்கின் கன்னத்தில் கயல்விழி அறைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link