செல்போன் டோக்கன் சரியா?: தமிழகத்தில் இருக்கும் 52 கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இந்த தடை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கோவிலுக்கு செல்வோர் 5 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி அதை அங்கிருக்கும் லாக்கரில் வைத்துவிட்டு சென்று சாமி கும்பிட வேண்டும்.
கோவில்களுக்குள் செல்ஃபிக்கள், ரீல்ஸ்கள் எடுப்பதால் அதை தவிர்த்து பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிட இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் அரசு கொண்டு வந்திருக்கும் இந்த தடைக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
யாரை பார்த்தாலும் காதில் செல்போனோடு கோவிலுக்குள் வந்து அவர்களும் நிம்மதியாக சாமி கும்பிடாமல் நம்மையும் கும்பிட விடாமல் இடையூறாக இருந்தார்கள். தற்போது தான் செல்போன் தொல்லை இல்லாமல் இருக்கிறது என்கிறார்கள் சிலர். மேலும் சிலரோ, செல்போனுக்கு டோக்கன் போட நீண்ட வரிசை இருக்கிறது. அந்த வரிசையில் நின்றே நேரம் போய்விடுகிறது. இன்னும் எப்படி எல்லாம் டோக்கன் போட்டு காசு வாங்குவார்களோ என்கிறார்கள்.
அண்ணாமலை ட்வீட்: இந்நிலையில் வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தன் கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் செய்யும் தவறுக்காக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாகிவிடக் கூடாது. அதனால் இந்த புது விதியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் என்பது மக்களுக்கு நிம்மதி, இறை நம்பிக்கையை அளிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர பதற்றம், நீண்ட வரிசைகளை உருவாக்கும் இடங்கள் அல்ல என்றார்.
விஜயசாரதியின் கருத்து: அண்ணாமலையின் ட்வீட்டை பார்த்த நடிகர் விஜய சாரதி கூறியிருப்பதாவது,கடவுளுக்கே வெளிச்சம். வண்டிக்கு டோக்கன் போட்டு, செருப்புக்கு டோக்கன் போட்டு, பின்னர் நீண்ட வரிசையில் நின்று போனுக்கு டோக்கன் போட்டு தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு செல்வதையே கேள்விக்குறியாக்கிவிட்டது இந்த புதிய சட்டம்.
அண்மையில் வடபழனி கோவிலுக்கு சென்றபோது அங்கு 60 முதல் 70 சதவீத இளைஞர்களை பார்த்தபோது மகிழ்ச்சி அடைந்தது உண்மையே. இனிமேல் வாகனத்திலேயே செல்போனை வைத்துவிட்டு சென்றால் வண்டி மீதும், போன் மீதும் தானே கவனம் இருக்கும். நிம்மதியாக சென்ற ஒரு இடம் கோவில் தான். இனி அதுவும் இல்லை. இங்கு வந்து என்னை திட்ட துவங்குவதற்கு முன்பு உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கேளுங்கள். அதன் பிறகு பதிவிடலாம் என்றார்.
தோனுமா மக்களே?: விஜயசாரதியின் ட்வீட்டை பார்த்து திட்டுபவர்கள் திட்டுகிறார்கள், பாராட்டுபவர்கள் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி.யும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு டோக்கன் போட மக்கள் வரிசையில் நின்ற வீடியோவை வெளியிட்டு, இந்த காத்திருப்பு வலியை பெற்றால் மறுபடியும் கோவிலுக்கு செல்ல எண்ணம் வருமா??எதிர்த்து உங்களின் கருத்து என்ன என கேட்டிருக்கிறார் மோகன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அது மட்டும் அல்ல இந்த புது டோக்கன் சட்டத்தை கலாய்த்து மீம்ஸ் வீடியோக்களும் வலம் வருகின்றன. அதில் கவுண்டமணியின் கலாய் வீடியோவை தான் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
முதல்வர் ஜோசப் விஜய் அரசு செய்தது சரியா, தவறா என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
