ராய்ப்பூர்: வலுவான அரசியல் உறுதிப்பாடு, திடமான பாதுகாப்பு கொள்கை , வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் ஆகியவை சத்தீஸ்கரில் நக்சல் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:ஒரு காலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இருந்த பகுதிகள் தற்போது சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், இணைப்பு வசதிகள், முதலீடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுடன் அடையாளம் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக சத்தீஸ்கரின் சில பகுதிகள் சிரமங்கள், போதுமான இணைப்பு வசதியின்மை மற்றும் நக்சல் பயங்கரவாதத்தின் கடுமையான சவாலை எதிர்கொண்டன.
சாலைகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டிய இடங்களில் தடைகளும், பள்ளிகள் செழித்திருக்க வேண்டிய இடங்களில் இடையூறுகளும், நமது பழங்குடியினர் மற்றும் தொலைதூர சமூகத்தினருக்கு மருத்துவமனைகளும் சுகாதார வசதிகளும் சென்றடைந்து இருக்க வேண்டிய இடங்களில் பெரும்பாலும் வறுமையும் பற்றாக்குறையும் இருந்தன.ஆனால், இன்றைய சத்தீஸ்கர் தனது கடந்த கால பாதிப்புகளில் இருந்து வெளி வந்துள்ளது. இது ஒரு மாபெரும் சாதனை மறறும் நம் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. இது வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பின் ஒரு புதிய விடியலைக் காண்கிறது.
பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதிப்பாடு மற்றும் முதல்வர் விஷ்ணு தியோ சாயின் அர்ப்பணிப்பு மிக்க தலைமை ஆகியவற்றின் கீழ் மாநிலம் ஒரு வரலாற்று திருப்புமுனையை அடைந்துள்ளது. பல தசாப்தங்களாக இருந்த நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.வலுவான அரசியல் உறுதி, திடமான பாதுகாப்பு கொள்கை மற்றும் வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் ஆகியவற்றால் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்திற்கு இந்த உருமாற்றம் ஒரு சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
