எழுதியவர்: மவுல் ஸ்ரீ சேத்
செப்டம்பர் 2 அன்று, 66 வயதான டாக்டர் நிர்மலா யாதவ் என்பவருக்கு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அதில், ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
அதை பார்த்ததும் “நான் ஒரு கணம் உறைந்து போய்விட்டேன்,” என்று பிரோஸாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் முன்னாள் முதல்வருமான யாதவ் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்து உள்ளார்.
அதாவது “அறக்கட்டளையில் எனக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு வழங்கப்படலாம் என்பதற்கான தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நான் ஒரு அறங்காவலர் ஆவேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதை உறுதிப்படுத்துமாறு வாட்ஸ் அப்பில் எனக்கு ஒரு செய்தி வந்தது, மேலும் அதற்கு உடனடியாகப் பதிலளிக்குமாறும் கேட்கப்பட்டது” என்றார். அன்று மாலை, அறக்கட்டளையின் முதல் மற்றும் ஒரே பெண் உறுப்பினராக அவர் அறிவிக்கப்பட்டார்.
“நான் இதை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. வாழ்க்கையில் நான் ஆற்ற வேண்டிய அனைத்து பாத்திரங்களையும் ஏற்கனவே ஆற்றிவிட்டதாகவே நினைத்தேன். அப்போதுதான் இது ராமர் அளித்த ஆசீர்வாதமாக வந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை நடந்த கூட்டத்தில், ராமர் கோயில் அறக்கட்டளை ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அதன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்தது. தொடர்ந்து, டாக்டர் யாதவ், வழக்கறிஞர் மதன்கோபால் பாண்டே மற்றும் தொழிலதிபரும் சமூக சேவகருமான மகேஷ் பக்சந்தகா ஆகிய மூன்று பேரை புதிய அறங்காவலர்களாக நியமித்தது.
கடந்த ஆண்டு பிம்லேந்திர மோகன் மிஸ்ரா மறைந்ததாலும், நன்கொடை திருட்டு சர்ச்சை தொடர்பாக முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் காலியாக இருந்த இடங்களை இந்த மூவரும் நிரப்புவர்.
25 ஆண்டுகள் முதல்வராக பணி, நீண்டகால சங்க தொடர்பு
இந்தியில் முனைவர் பட்டம் (PhD) பெற்ற யாதவ், 25 ஆண்டுகள் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற ஆசிரியர் அமைப்பான அகில பாரதிய ராஷ்டிரீய ஷைக்ஷிக் மகாசங்கத்திலும் (ABRSM) அவர் அங்கம் வகித்தார்.
நிர்வாகத்தில் தனக்குள்ள அனுபவம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு பங்களிக்க உதவும் என்று அவர் கூறினார். “எனது தேர்வு பெண்களுக்கு அதிகாரமளிப்பதை பிரதிபலிக்கிறது; முக்கியமான முடிவுகளின் போது பெண்களின் ஆலோசனைகளும் கவலைகளும் அறக்கட்டளையின் முன் சரியாக வைக்கப்படுவதை நான் உறுதிசெய்வேன்” என்றார்.
யாதவ் தனது வாழ்க்கையை 1999-ல் ஷிகோஹாபாத்தில் உள்ள பி.டி.ஏ கன்யா மகாவித்யாலயாவில் விரிவுரையாளராகத் தொடங்கினார். பின்னர் அதன் முதல்வரான அவர், 2006 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார். 2006 முதல் 2022 வரை, பிரோஸாபாத்தில் உள்ள மகாத்மா காந்தி முதுகலை கல்லூரியின் முதல்வராக இருந்தார். பின்னர் 2022-ல் ஓய்வு பெற்றார்.
அகில பாரதிய ராஷ்டிரீய ஷைக்ஷிக் அமைப்புடனான அவரது தொடர்பு 1999-ல் தொடங்கியது, அப்போது அவர் அதன் உத்தரபிரதேச யூனிட்டின் துணைத் தலைவரானார். அதைத் தொடர்ந்து அதன் தேசிய பெண்கள் பிரிவின் துணைத் தலைவராகவும், உயர்கல்விக்கான துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர் அவ்வமைப்பின் அகில பாரதிய ‘சம்பர்க் பிரமுக்’ ஆக பணியாற்றி வந்தார்.
ஓய்வு பெற்ற பிறகு, ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு ஆளுநரின் பரிந்துரையாளராக யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷிகோஹாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தில் திருமணம் செய்வதற்கு முன்பு அவர் பரேலி மற்றும் ஏட்டா மாவட்டங்களில் படித்தார்.
அவரது குடும்பத்தினருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் (RSS) தொடர்பு உண்டு. தனது மாமனார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் என்றும், வழக்கறிஞரான தனது மறைந்த கணவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டிலும் இருந்ததாகவும் யாதவ் கூறினார். தகவல்படி, யாதவ் கணவரின் குடும்பம் ஜமீன்தார் எஸ்டேட்டுடன் தொடர்புடையது, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1916-ல் ஷிகோஹாபாத்தில் ஒரு கல்லூரியை நிறுவினர்.
“அகிர் கல்லூரி” என்று அழைக்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் ஆதர்ஷ கிருஷ்ணா முதுகலை கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் சிறிது காலம் இங்கு படித்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கல்லூரி தனது கணவரின் கொள்ளு தாத்தாவால் நிறுவப்பட்டது என்று யாதவ் கூறினார்.
யாதவ் மேலும் கூறுகையில், “நான் எப்போதும் எனது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணி வருகிறேன். எனது முந்தைய அனுபவம் மற்றும் போராட்டங்களை கருத்தில் கொண்டு எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன், அதே நேர்மையுடன் இதை நிறைவேற்றுவேன்” என்றார். அவரது நியமனம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒன்று, பா.ஜ.க-வின் கருத்தியல் சாதனையின் மையப் புள்ளியான ராமர் கோயிலில் பிரதிநிதித்துவம் பெறும் ஒரு யாதவ் சமூகப் பெண் இவர். இரண்டாவது, சமாஜ்வாதி கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே பல தசாப்தங்களாக அரசியல் போட்டி நிலவும் யாதவ் சமூகத்தின் முக்கிய கோட்டையான ஷிகோஹாபாத்தைச் சேர்ந்தவராவர்.
