விசாரணைக் கைதி சபரி வர்மன் வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன். இவர் தனது வீட்டில் பொட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த சூழலில் அந்தக் கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி தென் தாமரைக்குளம் போலீசார் அவரைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். 

இதனையடுத்து 13ஆம் தேதி காலை சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். முன்னதாக சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சபரிவர்மன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தனர். மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் அவரிடம் அடிக்கடி லஞ்சம் வாங்கி வந்ததாகவும், போலீசாரின் தாக்குதலால் தான் அவர் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். 

மேலும் சபரிவர்மனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாகவும், கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும், வலது கையில் முறிவு இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் கை, கால்களைக் கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் இருந்ததாகவும், தலை, பின் கழுத்திலும் காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மூன்று பேர் மற்றும் கைதிகள் எட்டு பேர் என மொத்தம் 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

2வது படம் : சித்தரிக்கப்பட்ட மாதிரி படம் (AI IMAGE)

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பெற்றுக்கொண்ட பிறகு, புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்தவுள்ளனர். 

Source link