விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிவ்யூ: சுறா, வில்லு படங்களே பரவாயில்லை… புலம்பும் ரசிகர்கள்; படம் எப்படி இருக்கு?

தக் லைஃப் படத்தை தொடர்ந்து, அதேபோன்று சுமாரான பிம்பத்தை கொண்ட, ஆனால் நகைச்சுவை குறைந்த மற்றொரு ‘நாயகன்’ களமிறங்கி உள்ளார். எச். வினோத்தின் ‘ஜன நாயகன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திர கலாச்சாரத்தில் உள்ள தவறான போக்குகளை தெள்ள தெளிவாக பிரதிபலிக்கிறது. கதையில்வரும் அனைத்து விஷயங்களும் ஒரே ஒரு நபரை சுற்றியே சுழல்வதால், அவரை தவிர மற்ற அனைவருமே படத்தில் முக்கியத்துவமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

திரையில் நட்சத்திரத்தை மட்டுமே அனைத்து காட்சிகளிலும் நிறுத்தி, அவர்களின் வழக்கமான சிக்னேச்சர் மேனரிசங்களைச் செய்ய வைப்பது தயாரிப்பாளர்களின் வழக்கமான தந்திரமாகிவிட்டது. இதன் மூலம் ரசிகர்கள் படத்தின் ஒட்டுமொத்தக் குளறுபடிகளையும் மறந்துவிடுவார்கள் என்றும், தங்களின் பணத்திற்கு பாதிகூடப் பெறாத ஒரு பொருளைக் கொடுத்து தங்களை ஏமாற்றியுள்ளனர் என்பதை உணரமாட்டார்கள் என்றும் படைப்பாளிகள் நம்புகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான நடிகர் விஜய்யின் திரையுலகின் ‘கடைசிப் படம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஜன நாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் சர்ச்சையினால் 7 மாதங்கள் தாமதமாக வெளியானது அனைவரும் அறிந்ததே.

ஆனால், ஆரம்பத்தில் ‘தளபதி 69’ என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்படத்தின் வளர்ச்சி காலவரிசையையும், தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பயணத்தையும் கூர்ந்து கவனித்தால், விஜய்யும் படக்குழுவினரும் இப்படத்தையும் கட்சியையும் ஒன்றுக்கொன்று பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

‘தளபதி 69’ தான் தனது கடைசிப் படம் என்றும், “எனது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே அதைத் துறக்கிறேன்” என்றும் விஜய் அறிவித்தது த.வெ.க கட்சிக்கு அரசியல் வேகத்தைக் கூட்ட உதவியதே தவிர, அதே அர்ப்பணிப்பை அவர் இந்தப் படத்தில் காட்டவில்லை என்பதைத் தான் ‘ஜன நாயகன்’ நிரூபிக்கிறது. தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ சிறிதும் இருந்ததாகத் தெரியவில்லை. இயக்குநர் எஸ்.பி ராஜ்குமாரின் சுறா (2010), பிரபுதேவாவின் வில்லு (2009) ஆகிய படங்கள் விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிக மோசமான படங்கள் என்று கருதப்பட்டவை. ஆனால், ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்த பிறகு, அந்தப் படங்கள் அவ்வளவு வெறுப்பிற்கு தகுதியானவை அல்ல என்று தோன்றுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சுறாவும் வில்லுவும் மோசமான படங்கள் என்றாலும், அவை தங்களை பெரிய ‘சினிமா பிரம்மாண்டம்’ என்றோ அல்லது தத்துவ கருத்துக்களைக் கூறும் படங்கள் என்றோ காட்டிக்கொள்ள முயலவில்லை. அவை வெறும் பொழுதுபோக்கு நட்சத்திர வாகனங்கள் மட்டுமே. மேலும், இந்திய வணிக சினிமாவின் தரம் மிகக்குறைவாக இருந்த 2000-களின் பிற்பகுதியில் அவை வெளிவந்தன. ஆனால், தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த 2026-ல், விஜய் இந்த நாட்டில் உள்ள மற்ற அனைவரையும் விடச் சிறந்தவர் என்ற கூற்றைத் தவிர வேறெந்த கலை நயமும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து வைத்திருப்பதைப் பார்த்தால், ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு பதிலாக சுறா மற்றும் வில்லு திரைப்படங்களையே மீண்டும் பார்க்கலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி (2023) படத்தின் பகுதி ரீமேக்தான் ‘ஜனநாயகன்’. ஆரம்பத்திலிருந்தே படத்தின் தரம் மிகக் குறைவாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பகவந்த் கேசரியின் சாதாரணமான கதாநாயகன் அறிமுகக் காட்சியை அப்படியே ரீமேக் செய்துள்ள இயக்குநர் எச். வினோத், அதில் சில நுட்பமற்ற அரசியல் அடையாளங்களை மட்டுமே சேர்த்துள்ளார். உதாரணத்திற்கு, விஜய்யின் முகம் திரையில் தோன்றுவதற்கு முன்பு, ரவுடிகளால் காற்றில் வீசப்படும் “இந்திய ஜனநாயகம்” (Indian Democracy) என்ற புத்தகத்தைப் பிடித்து, இந்திய ஜனநாயகத்தை விஜய் காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார்கள்.

அடுத்த சில நிமிடங்களில், எம்.ஜி.ஆர் சுவரோவியத்தின் அருகில் தீப்பிடித்து எரியும்போது விஜய்யின் முகம் காட்டப்படுகிறது. இதைப் பெரிய குறியீடாகப் படைப்பாளிகள் நினைத்திருக்கலாம், ஆனால் இவை மிகவும் பின்தங்கிய, சிறுபிள்ளைத்தனமான உத்திகளாகவே உள்ளன. படம் முழுவதும் இதுபோன்ற ‘இயக்குநரின் புத்திசாலித்தனங்கள்’ மலிந்து கிடக்கின்றன. பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்களுக்கு அருகில் விஜய்யின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒருகாட்சியில், சிலப்பதிகார கண்ணகியின் சிலை தனது விரலை விஜய்யை நோக்கி நீட்டி, மக்களின் துயரங்களுக்கு அவரே தீர்வு என்பது போல் காட்டுகிறது. மற்றொரு இடத்தில் எம்.ஜி.ஆரின் படம் அவருடன் உரையாடுகிறது. இவை அனைத்தும் ‘ஜன நாயகன்’ அரசியல் பிரச்சார படம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கதாநாயகனின் பெயரை ‘தளபதி வெற்றி கொண்டான்’ (TVK) என்று வைத்து நுட்பம் என்ற சொல்லையே தூக்கி எறிந்துள்ளார் வினோத்.

பெற்றோரை இழந்த விஜி (மமிதா பைஜூ) என்ற பெண்ணை தளபதி சிறுவயதிலிருந்தே வளர்த்து வருகிறார். படத்தின் உணர்ச்சிப்பூர்வமான மையம் இவர்களின் பந்தத்தைச் சுற்றியே அமைய வேண்டும். ஆனால், இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி திரையில் சற்றும் வேலை செய்யவில்லை. மேலும், விஜி “ஃபியர் போபியா” (Fear Phobia) என்ற பாதிப்பால் அவதிப்படுவதாகக் கூறப்படும் காட்சி, மனநலம் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகூட இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் தேர்தல் அறிக்கையில் உள்ள புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளைப் பிரிக்கும்போது, இதுபோன்ற விஷயங்களுக்கு யார் மூளையைப் பயன்படுத்தப் போகிறார்கள்? படம் ஒரு தந்தை-மகள் கதையா அல்லது பொலிட்டிகல் த்ரில்லரா என்பதில் தெளிவில்லாமல் குழம்புகிறது.

அதேபோல, ஜான் ஹிம்லர் எலியாஸ் அம்ரிஷ் பூஜாரி (பாபி தியோல்) என்ற வில்லன் திடீரென அறிமுகமாகி, அகாடமி விருது பெற்ற மார்வெல் வில்லன் ‘தானோஸ்’ பாணியில் உலகையே அழிக்கக் கிளம்புகிறார். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் தோற்றுவிடும் நிலையில், ‘தளபதி’ ஒற்றை ஆளாக நாட்டைக் காப்பாற்றுகிறார். கிளைமாக்ஸில் ரிமோட் கண்ட்ரோல் போர் காட்சிகள் வரை சென்று, ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

இயக்குநர் ஓம்ரவுட்டின் ஆதிபுருஷ் (2023) படத்தை போலவே, ‘ஜன நாயகன்’ திரைப்படமும் அதன் மோசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்க்காக (VFX) கடும் விமர்சனத்திற்குரியது. குறிப்பாக கப்பலில் நடக்கும் சண்டை காட்சி மிகவும் செயற்கையாக உள்ளது. அன்பறிவ் மாஸ்டரின் வழக்கமான சண்டை பயிற்சியும், அனிருத்தின் சுவாரஸ்யமில்லாத பின்னணி இசையும் படத்தைக் காப்பாற்றத் தவறுகின்றன. மேலும், பிகில் (2019) திரைப் படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் பெண்களின் முன்னேற்றம் என்பது ‘தளபதி’ கூட இருக்கும்போது மட்டுமே சாத்தியம் என்பது போன்ற போலித்தனமான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விஜய்யின் அரசியல் பிம்பத்தைக் கட்டமைப்பதற்காகச் சேர்க்கப்பட்ட பாலியல் கல்வி மற்றும் ஜனநாயகம் குறித்த நீண்ட பிரசங்கங்கள், படத்தின் ஓட்டத்திற்குப் பெருந்தடையாக அமைகின்றன.

அரசியல் கதைகளில் வழக்கமாகத் துரோகியாகக் காட்டப்படும் பாகிஸ்தான் வில்லன் கதாபாத்திரத்தைத் தவிர்த்து, இந்தியக் காவல் அதிகாரியாகவே பாபி தியோலை அமைத்தது பாராட்டுக்குரியது. இருப்பினும், அந்தக் கதாபாத்திரம் மிகவும் பலவீனமாக எழுதப்பட்டுள்ளது. அதேபோல, பிரகாஷ் ராஜ் ஏற்றுள்ள ரோஜா ரங்கசாமி என்ற அரசியல்வாதி கதாபாத்திரம், விஜய் தனது நிஜ அரசியல் எதிரிகளை எவ்வாறு சித்தரிக்கிறாரோ, அதேபோலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 90-களின் பிற்பகுதியில் விஜய்யிடம் இருந்த அதே “இளம் தென்றல்” பிம்பத்துடன், ஒரு இளம் பெண்ணிற்குத் தந்தையாக/தந்தை போன்ற உருவமாக அவர் நடித்திருப்பது காண்பதற்கு இனிமையாக உள்ளது. ‘ஜன நாயகன்’ ஒரு பிரச்சார படமாக இல்லாமல் இருந்திருந்தால், கௌதம் வாசுதேவ் மேனனின் என்னை அறிந்தால் படம் போல ஒரு நல்ல தந்தை-மகள் கதையாக உருவெடுத்திருக்கக்கூடும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சினிமாவில் இருக்கும் விஜய், தனது கடைசிப் படமாக இப்படிப்பட்ட ஒரு ரீமேக் கதையைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவரது சினிமா அறிவின் எல்லையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், சதுரங்க வேட்டை (2014), தீரன் அதிகாரம் ஒன்று (2017) போன்ற தரமான படங்களைக் கொடுத்த இயக்குநர் எச். வினோத்தின் இந்த வீழ்ச்சி ஆராய்ச்சிக்குரியது. வலிமை, துணிவு படங்களின் விமர்சனங்களுக்கு பிறகு, அவர் மீண்டும் ஒரு மோசமான ரீமேக்கைத் தேர்ந்தெடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தைப் பல அடிகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.

தன் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்க வேண்டிய விஜய், தமிழகத் தேர்தலில் வெற்றி பெறுவதையே ஒரே இலக்காக கொண்டு, தனது சக கலைஞர்களை பயன்படுத்தி 3 மணி நேர அரசியல் பிரச்சாரப் உரையைச் திரைப்படமாகக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் விஜய்.

Source link