கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்.6) செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம், சட்டம்-ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது;
”தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முக்கியச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக் கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழல் கனிந்திருப்பதை அமைச்சர் வன்னியரசு உறுதி செய்துள்ளார்.
தவெக கூட்டணி அமைப்பது தொடர்பாக இரண்டாவது முறையாகக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறது. இதில் யார் யார் பங்கேற்கிறார்கள் மற்றும் அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவென்று கூட்டம் முடிந்த பின்னரே தெரியவரும்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் காரசாரமாக விமர்சித்துக்கொள்வது வழக்கம் தான். இருப்பினும், மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். விவாதங்கள் தேவையின்றி சண்டை, சச்சரவுகளாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், நகைச்சுவையாகக் கூறப்படும் கருத்துகளை நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
த.வெ.க.வின் பிரதமர் வேட்பாளர் விஜய் என்பது தொண்டர்களின் விருப்பமே தவிர, அதிகாரப்பூர்வ முடிவல்ல என கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். #TVKVijaypic.twitter.com/S8Jkun8bJf
— Indian Express Tamil (@IeTamil) September 6, 2026
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் கடமையாகும்.
விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை”
இவ்வாறு திருமாவளவன் அந்த பேட்டியில் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, “தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜய்யா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொல். திருமாவளவன் மீண்டும் திரும்பி வந்து பதிலளித்தார்.
தவெக முன்னணித் தலைவர்கள் யாரும் விஜய்யைப் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை. மற்றவர்கள் பேசுவதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது. வடஇந்திய ஊடகங்கள் மோடி, ராகுல் காந்தியுடன் விஜய்யின் பெயரையும் சேர்த்துச் சித்திரயம் செய்வதால், உற்சாக மிகுதியில் தொண்டர்கள் அவ்வாறு பேசி வருகிறார்கள்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேச வேண்டிய சூழல் வரும்போது பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும், அப்போது அதுகுறித்துக் கூறுகிறேன்” என்று சிரித்தபடியே கூறி நகர்ந்தார்.
