திருப்பூர்: ‘விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில், ‘ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கக்கூடாது; முளைப்பாரி எடுத்து வரக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள், ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைக்கு எதிரானவை.
மேள தாளம் வாசிப்போர், பள்ளிவாசல் அருகே குறிப்பிட்ட துாரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதும், சாலைகளில் செல்லும் உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இல்லாவிடில், ஹிந்து முன்னணி சார்பில் நடக்கும் விசர்ஜன ஊர்வலத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும். முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடக்க, உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
