பாகிஸ்தானின் மிக முக்கிய நகரமான கராச்​சி​யில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கராச்சியின் புறநகர்ப் பகு​தி​யான கஸ்​த​ரா​பாத் நகரில் பழமை​யான ’கணேஷ் மத் மந்திர்’ எனும் விநாயகர் கோயில் உள்​ளது. இந்த கோயிலை மராத்​தி​யர்​கள் நிர்​வகித்து வரு​கின்றனர். இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. அதனால், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடக் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு வரு​கிறது.
இதன் ஒரு பகு​தி​யாக, கோயிலில் உள்ள விநாயகர் சிலைக்குப் புதி​தாக வண்​ணம் தீட்​டப்​பட்​டது. கராச்​சியை சேர்ந்த பிரபல முஸ்​லிம் ஓவியர், இந்த விநாயகர் சிலைக்கு வண்​ணம் தீட்​டி​னார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவின் மீது ”யார் இந்து, யார் முஸ்லிம்? கடவுளின் வல்லமையும் கராச்சியின் அழகும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ இணைய வாசிகளிடமிருந்து பல்வேறு விதமான கருத்துக்களைப் பெற்று வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் ’இதய’ குறியீடுகள் மூலம் தங்கள் மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், மற்றவர்கள் அந்த கலைஞரின் பணியை வெகுவாகப் பாராட்டினர். அந்த முஸ்லீம் ஓவியக்கலைஞர் விநாயகர் முன்பு அமர்ந்து வண்ணம் தீட்டும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
