அடுத்த வாரம் திங்கட்கிழமை (14-09-26) நாடு முழுவதும் ’விநாயகர் சதுர்த்தி’ விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது பந்தல்கள் அல்லது மண்டபங்கள் அமைக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல, ஆந்திர மாநிலத்திலும் வழக்கம் போல விநாயகர் சதுர்த்தி விழா பல இடங்களில் மண்டபங்கள் அமைத்து அதில் சிலைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலை வைத்து சதுர்த்தியைக் கொண்டாட, மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் தற்காலிக விநாயகர் சதுர்த்தி மண்டபங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். வழக்கமாக, விநாயகர் சதுர்த்தியின் போது, ​​மின்சாரத் துறையிடமிருந்து தற்காலிக இணைப்புகளைப் பெறுவதற்கு ஏற்பாட்டாளர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு தற்காலிக மண்டபங்களில் மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள், ஒலி அமைப்புகள் மற்றும் பிற அலங்காரங்களை அமைப்பதற்கான மின்சாரக் கட்டண சுமையை வெகுவாக குறைக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு, மாநிலம் முழுவதும் உள்ள விநாயக உற்சவ குழுவினர் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
