விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம்: எஸ்எஸ்ஐ கைது

திருப்பத்துார் : ஆலங்காயம் அருகே, விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், மாதனுாரை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் கடந்த, 19ம் தேதி காவலுார் பகுதிக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி மீது, கார் மோதி அவர் படுகாயமடைந்தார். காவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க மஞ்சுநாதனிடம், விசாரணை அதிகாரியான ஆலங்காயம் எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணன், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். மஞ்சுநாதன், 5,000 ரூபாய் தருவதாக கூறிய நிலையில், இது குறித்து மஞ்சுநாதன், திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். ஆலங்காயம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய, 5,000 ரூபாயை மஞ்சுநாதன் கொடுத்தபோது, லஞ்ச பணத்தை பெற்ற எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Source link