தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையாளர்களுக்குப் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளித்தும், சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான வரி விகிதத்தைக் கணிசமாகக் குறைத்தும் தமிழக அரசு புதிய அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது வசூலிக்கப்படும் விமான எரிபொருளுக்கான மதிப்பு கூட்டு வரி விகிதம் 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு வரும் நவம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு வரை ஒரு வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வரிக்குறைப்பு மூலம் விமான கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்குச் சொந்தமில்லாத, ஆனால் அவற்றிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி சில்லறை விற்பனை செய்யும் டீலர்களுக்கு, ‘தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த சில்லறை விற்பனையாளர்கள் ‘தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017’-இன் கீழ் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் ஜே. குமரகுருபரன் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
