விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் : செப். 17 ல் முதல்வர் விஜய் வருகைக்கு ஏற்பாடு

மதுரை: தமிழக அரசு சார்பில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம்’ தொடக்க விழா விருதுநகரில் செப்.,17 ல் நடக்க உள்ளது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

திமுக ஆட்சியில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்காக ‘முதல்வர் காலை உணவுத் திட்டம்’ அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இத்திட்டம் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்க செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இதன் மூலம் 15,454 அரசு, உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 15,14,274 மாணவர்கள் பயன்பெறுவர்.

இந்த விரிவாக்கத் திட்டத்தை விருதுநகரில் காமராஜர் படித்த கேவிஎஸ் பள்ளியில் தொடங்கி வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளையும் கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த விரிவாக்க திட்டத்தை காமராஜர் படித்த பள்ளியில், முதல்வர் விஜய் துவக்கி வைக்க ஆலோசனை நடக்கிறது. முதல்வர் நிகழ்ச்சி இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையினர் இணைந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

அன்றுதான் மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விருதுநகருக்கு முதல்வர் வரும்பட்சத்தில் மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கலாம் என தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் முதல்வர் நிகழ்ச்சிகள் உறுதிசெய்யப்படவில்லை.

Source link