விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரயில் சேவை இந்த தேதிகளில் பாதிப்பு: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்திலும் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என். ஜெயந்த் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரயில்வேயின் பேரணி – மயிலம் யார்டுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ரயில் இயக்கப் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 3 ,4,5,6,7 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் – சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 3,4,5,6,7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் – திண்டிவனம்இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 20665), செப்டம்பர் 3,4, 5 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும்சென்னை எழும்பூர் – மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635), செப்டம்பர் 3,4,5 தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 110 நிமிடங்களும் , செப்டம்பர் 6 ஆம் தேதி சுமார் 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 95 நிமிஷங்களும், சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06059) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 90 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு,பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி – காக்கிநாடா துறைமுகம் கிர்கார் விரைவு ரயில் (வண்டி எண் 17656), செப்டம்பர் 3,5 ஆகிய தேதிகளில் சுமார் 15 நிமிஷங்களும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி – கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17654) செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 140 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி – திருப்பதி பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண் 16112) செப்டம்பர் 4- ஆம் தேதி சுமார் 25 நிமிஷங்களும், 6-ஆம் தேதி சுமார் 30 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link