எழுதியவர்: பிரத்யுஷ் தீப்
உணவு பாதுகாப்பை பாதிக்காமல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை விரிவாக்கும் நோக்கில், ஒரே நிலத்தில் சூரிய மின் உற்பத்தியையும் விவசாயத்தையும் மேற்கொள்வதற்கு ஏதுவான ‘அக்ரி – போட்டோவோல்டாயிக்ஸ்’ (Agri-photovoltaics / Agrivoltaics) முறையை ஊக்குவிக்க நிதியுதவிகளை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க
இந்தியாவில் அக்ரி-போட்டோவோல்டாயிக்ஸ் சாத்தியக்கூறு திறன் 1 முதல் 2 டெராவாட் அல்லது 1000 முதல் 2000 ஜிகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கி தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் 171 ஜிகாவாட்டாக உள்ளது.
அக்ரி – போட்டோவோல்டாயிக்ஸ் முறையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, மத்திய துறை திட்டம் ஒன்றை செயல்படுத்துவது குறித்து நிதியமைச்சகத்துடன் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருப்பினும், வேளாண் துறையில் சோலார் ஆற்றலை ஊக்குவிக்கும் தற்போதைய ‘பிஎம்-குசும்’ திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவிகளை வழங்கலாமா அல்லது புதிய திட்டத்தின் மூலம் வழங்கலாமா என்பது குறித்து அரசு இன்னும் பரிசீலித்து வருவதாக, அக்டோபர் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள ‘7-வது உலக அக்ரிவோல்டாயிக்ஸ் மாநாடு 2026’ குறித்த செய்தியாளர் சந்திப்பில் சாரங்கி தெரிவித்தார்.
உயர்ந்த செலவு மற்றும் இரட்டை நில பயன்பாடு
அக்ரி – போட்டோவோல்டாயிக்ஸ் என்பது விவசாய நிலங்களுக்கு மேலே உயரமான கட்டமைப்புகளில் சோலார் பேனல்களை நிறுவுவதை உள்ளடக்கியது. இது விவசாயிகள் அதே நிலத்தில் கீழே பயிர் செய்கையை தொடர அனுமதிக்கும் அதே வேளையில் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, வழக்கமான தரைவழி சோலார் திட்டங்களில் பயன்படுத்தப்படும் அதே போட்டோவோல்டாயிக்ஸ் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பேனல்களை உயர்த்தி நிறுவுவதற்கும், அதன் கீழே விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமான இடத்தை விடுவதற்கும் தேவைப்படும் கூடுதல் உள்கட்டமைப்பில்தான் வேறுபாடு உள்ளது.
சாரங்கியின் கூற்றுப்படி, எந்திரங்களின் நடமாட்டம் உட்பட அன்றாட விவசாயப் பணிகளை விவசாயிகள் எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்காக, சோலார் பேனல்கள் வழக்கமாகத் தரையிலிருந்து சுமார் 3.5 முதல் 4 மீட்டர் உயரத்தில் நிறுவப்படுகின்றன. இருப்பினும், இந்த கூடுதல் சிவில் மற்றும் கட்டமைப்பு வசதிகள் காரணமாக, வழக்கமான தரைவழி சோலார் திட்டங்களை விட அக்ரி – போட்டோவோல்டாயிக் திட்டங்கள் 25-30% வரை அதிக செலவு கொண்டவையாக அமைகின்றன என்று சாரங்கி கூறினார்.
“இந்த வகையான சாய்ந்த கட்டமைப்பை அமைப்பதில் ஏற்படும் 25% கூடுதல் செலவு இடைவெளியைப் பூர்த்தி செய்வதே எங்களின் நோக்கமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்
சோலார் திறனை பல மாநிலங்களுக்கு விரிவாக்குதல்
தற்போது நாட்டின் 85% சோலார் மின் உற்பத்தி திறன் ஐந்து மாநிலங்களில் மட்டுமே குவிந்துள்ள நிலையை மாற்ற இந்த முயற்சி உதவும் என்று சாரங்கி கூறினார். இத்தகைய அதிகப்படியான குவிப்பானது, நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்ற இடங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான மின் கடத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகளவில் மின்கடத்தி பாதைகள் வரும்போது, உள்ளூர் எதிர்ப்புகள், வழி உரிமை தொடர்பான சிக்கல்கள் மற்றும் நில கையகப்படுத்தல் தொடர்பான சிக்கல்கள் எழுவதை நாங்கள் கண்டுள்ளோம். எனவே, நமது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனுக்கு ஆதரவாக மின் கடத்தி உள்கட்டமைப்பை எவ்வாறு கூடுதலாக பலப்படுத்துவது என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதற்கான தீர்வு என்னவென்றால் இத்திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் விரிவாக்குவதாகும். இதன் மூலம் அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர முடியும்” என்று அவர் கூறினார்.
அவரை பொறுத்தவரை, விவசாயம் அல்லாத நிலங்கள் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அக்ரி – போட்டோவோல்டாயிக்ஸ் பயன்பாடு பெரிதும் உதவும். இது உணவு பாதுகாப்புத் தேவைகளில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் பெரிய அளவிலான சோலார் மின் உற்பத்தியை சாத்தியமாக்கும். குறிப்பாக, அரசு நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டு ஆய்வுகளில், அக்ரி – போட்டோவோல்டாயிக்ஸ் பயன்பாடானது பழங்கள் மற்றும் கீரை வகைகளுக்கு ஏற்றதாக இருந்தாலும், நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கு ஏற்றதாக கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
