“விஷயமே தெரியாமல் பேசுகிறார்கள்… மனது வலிக்கிறது” – சுந்தர் சி வருத்தம்

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

இப்படம் புராணக் கதை பின்னணியில் ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி கலந்த சாமி படமாக உருவாகியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் இயக்குநர் சுந்தர் சி பேசுகையில், “பட வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த படத்தில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லத ஒரு உழைப்பை போட்டு வருகிறேன். நான் என்றைக்குமே ஹீரோவுக்காக கதை எழுதியதில்லை. நான் எழுதிய கதையில் தான் நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். அது போல் ஒரு ஐடியா என்னிடம் இருந்தது. ஆனால் அது அம்மன் கதையாக இல்லை. அந்த சமயத்தில் தான் ஐசரி சார் மூக்குத்தி அம்மன் 2 நீங்க பன்றீங்களா எனக் கேட்டார். அது தெய்வீக சக்தி போல் இருந்தது. 

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் நான்கு விஷயங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. படத்தின் டைட்டில், ஐசரி சார், நயன்தாரா மற்றும் ஊர்வசி மேடம். இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் என யாருமே நினைக்கவே இல்லை. நானும் வெங்கட் என்பவரும் 2 வருஷத்துக்கு இதில் உழைப்பை போட்டுள்ளோம். பின்பு 800 பேர் ஒன்றரை வருஷமாக உழைத்துள்ளார்கள்.

சிஜி-யை பொறுத்தவரை கிட்டத்தட்ட 400 கலைஞர்கள் வேலை பார்த்துள்ளனர். இது சாதாரனமானது கிடையாது. ஆனால் யூடியூபில் சில விமர்சனங்களை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை விஷயமே தெரியாமல் ஏஐ என பேசும்போது தான் மனது வலித்தது. இந்த படத்தில் மொத்தம் 3000 ஷாட்டுகளுக்கு மேல் சிஜி இருக்கிறது. அதில் 15 ஷாட்டுக்குத்தான் ஏஐ-யை பயன்படுத்தினோம். படத்தை பாருங்கள், சிஜி நல்லாயிருந்தால் பாராட்டுங்கள், நல்லா இல்லை என்றால் தட்டிக் கொடுங்கள். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் இந்தப்படம்” என்றார்.