பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பாதுகாப்பு கவுண்டர்கள், லாக்கர்கள் மற்றும் மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சேவைக்கான ஊழியர் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புச் செலவுக்காக மட்டும் ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த விதிமுறை கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இன்று (03-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பொதுமக்களுக்கு சில இடங்களில் சிக்கலோ, பிரச்சனையோ இருக்கிறது என்றால் அதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் தான் செய்யும். அதில் நாங்கள் எந்தவிதமாக தயக்கமும் காட்டமாட்டோம். கோயில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 யை வாங்கலாமா வேண்டாமா? என்பதை கோயில்களே முடிவெடுக்கலாம் என்பதை சொல்லிருக்கிறோம். அதில் நாங்கள் எந்தவிதமான கட்டாயத்துக்கு உட்படுத்தவில்லை. கோயில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது. அந்த 52 கோயில்களும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள். அந்த கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் சாமி குடும்பிடுவதற்கு தான் மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தான் நாம் அமல்படுத்தியிருக்கிறோம்.
அறநிலையத்துறை வேண்டாம் என்று நினைப்பவர்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள். பா.ஜ.க ஆளும் வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் செல்போன்களுக்கு தடை உள்ளது. எனவே இதில் உண்மையிலேயே பக்தர்களுக்கு ஏதாவது சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும். கூட்டம் அதிகமாக வரக்கூடிய விஷேச நாட்களில் கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை இல்லை. மாற்றுத்திறனாளிகளிடம் செல்போன்களை வாங்க வேண்டியதில்லை” என்று கூறினார்.
