வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது

நமது நிருபர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சியில் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் முருகேசன் 58, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ராஜா சண்முகவேல் 34, ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பூம்பாறை ஊராட்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா. இவரது தந்தை இறந்த நிலையில் தன் பெயருக்கு வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு சமீபத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பித்து இருந்தார். பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ஊராட்சி செயலர் முருகேசன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ராஜா சண்முகவேல் ஆகியோர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் அறிவுறுத்தியபடி பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து முருகேசனிடம் ரூ.5 ஆயிரத்தை ராஜா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் ரூபா கீதாராணி, பழனிசாமி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Source link