வீண் விவாதங்கள், பழைய விமர்சனங்களால் சட்டப்பேரவை நேரம் விரயம்: கொமதேக குற்றச்சாட்டு

கரூர்: “சட்டப்பேரவையில் அதிகமான நேரம் வீண் விவாதங்களுக்கும், பழைய விமர்சனங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது,” என கொமதேக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வேதனை தெரிவித்தார்.

கரூரில் மணவாடியில் இன்று (செப்.13) தனியார் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:

கரூரை பொறுத்தவரை பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எதிர்பார்க்கின்ற பகுதி, மின்வெட்டு காரணமாக தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அறிவிக்கப்படாத மின் வெட்டை தமிழக அரசு உடனடியாக தீர்க்க முன் வரவேண்டும். மாற்றத்திற்காக மக்கள் அளித்த வாக்கு. 6 மாத காலம் அவகாசம் கேட்டனர். 4 மாதங்கள் ஆகிவிட்டன. பல்வேறு நிர்வாக குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்.

பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்படுகிறது. மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதாக அறிவித்துள்ளனர். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவிப்பை திரும்பப் பெறுவதை தவிர வேறு வழியில்லை.

காலை உணவு திட்டத்திற்கு யார் செலவு செய்வது என்பது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றனர். அவர்கள் தேர்வு செய்துள்ள இடங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளன.

அவர்கள் தேர்வு செய்துள்ள செய்யூர், கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகில் உள்ளது. கும்மிடிப்பூண்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ளது. விமான நிலையம் இடத்தேர்வு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் பரந்தூருக்கே வந்துவிடும் என யோசிக்க தோன்றுகிறது. அரசை பொறுத்தவரை இந்த குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

முடிவு எடுப்பதற்கு முன்பு தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். தனிமனித விமர்சனம், கொச்சைப்படுத்தி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நிலைப்பாடு.

சட்டப்பேரவை என்பது சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடம். அதிகமான நேரம் வீண் விவாதங்களுக்கும், பழைய விமர்சனங்களும் செலவழிக்கப்படுகிறது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறைவாக இருக்கின்றன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

சபாநாயகர் நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறாரோ என்று தோன்றுகிறது. சபாநாயகர் இதனை சரி செய்ய முடியும். அமைச்சரோ, எம்எல்ஏவோ இது போன்று பேசும்போது தேவையில்லாத பிரச்சினைகளை பேசும்போது தடுக்க முடியும். அதை விட்டு வேடிக்கை பார்ப்பதால் பல பிரச்சினைகள் வருகிறது. சபாநாயகர் சபையை நடத்தும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்காமல் ராஜினாமா செய்கின்றனர் என்பது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் விரும்பாத தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் வந்துள்ளது. திமுக தலைமையில் எங்கள் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தனிப்பட்ட முறையில் 10 நாட்களில் கட்சி தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு சுய நலத்திற்காக ராஜினாமா செய்கிருக்கின்றனர். அந்த கட்சியின் தலைமையின் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

எல்லா பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது. விலைவாசி குறித்து அரசு யோசித்ததாக தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போட்டுவிட்டு சந்தோஷமாக உள்ளனர்,” என்று தெரிவித்தார்.

Source link