நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘வெட்னஸ்டே(Wednesday)’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ஜென்னா ஒர்டேகா. இதற்கு முன்பாக தனது 9 வயது முதலே பல்வேறு சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் கணிசமான ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது ‘கிளாரா அண்ட் தி சன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நேற்று(23.10.2026) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் இதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிறிது காலம் தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடருக்கு முழுக்கு போடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் அப்பேட்டியில் பேசியதாவது, “உண்மையைச் சொல்லப்போனால், பெரிய தொடர்கள் எதுவும் என்னிடம் இப்போது வருவதில்லை. நான் எதைச் செய்ய வேண்டுமோ, அதுவே என்னைத் தேடி வரும் என்று நம்புகிறேன். வெட்னஸ்டே தொடருக்குப் பிறகு, நான் சிறிது காலம் தொலைக்காட்சியில் நடிக்கமாட்டேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக நான் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளேன். சிறுவயதிலிருந்தே அதில் நடித்து வருவதால் இப்போது, ​​புதிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க விரும்புகிறேன்” என்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தான் நிறைய நடித்துவிட்டதாகவும் படத்தில் நடிக்கத்தான் தனக்கு அதிக விருப்பம் எனவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் இனிமேல் அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது வெட்னஸ்டே தொடரின் 3வது சீசனில் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவுக்கு வந்தது. ஆனால் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
