“வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்” – முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாளையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் சுத்தம் செய்து, மாவிலை மற்றும் தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தொழில் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் புத்தகங்களுக்குச் சந்தனம், குங்குமப் பொட்டிட்டு, பொரி, சுண்டல், பழங்கள் மற்றும் இனிப்புகளைப் படைத்து நன்றி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!. ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.