புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இந்த மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பார்லி., கூட்டுக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. தற்போது இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பீஹாரின் பெட்டியா தொகுதி பாஜ எம்பி சஞ்சய் ஜெயஸ்வால் இந்த குழுவிற்குத் தலைமை தாங்குவார்.
குழுவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டிலிருந்தும் எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், லோக்சபாவில் இருந்து 21 எம்பிக்களும், ராஜ்யசபாவில் இருந்து 10 எம்பிக்களும் உள்ளனர். இதில் பாஜவிலிருந்து 14 எம்பிக்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஐந்து எம்பிக்களும் அடங்குவர்.
மேலும் ஜேடி(யு), திரிணமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு எம்பிக்களும், சமாஜ்வாதி ஐயுஎம்எல், சிவசேனா, என்சிபி (எஸ்பி), என்சிபி மற்றும் டிடிபி ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒரு எம்பியும் உள்ளனர். பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையை லோக்சபாவில் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருத்த மசோதாவின் முக்கியம்சங்கள்!
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் எவ்வாறு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதை எப்.சி.ஆர்.ஏ., சட்டம் நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை கடுமையாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* ஒரு தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ அல்லது அவர்களாகவே முன்வந்து ஒப்படைத்தாலோ, அந்த அமைப்பு வெளிநாட்டு நிதி மூலம் வாங்கிய நிலம், கட்டடங்கள் மற்றும் இதர சொத்துகள் அனைத்தையும், அரசு நியமிக்கும் ஒரு குறிப்பிட்ட அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும்.
* இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை, அரசு தன் துறைகளுக்கு மாற்றலாம் அல்லது அவற்றை விற்று அந்த பணத்தை இந்திய ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்து கொள்ளலாம் உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால், அந்த அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதற்கோ அல்லது பெறுவதற்கோ உடனடியாக தடை விதிக்கப்படும்
* வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறியதாக ஒரு அமைப்பு மீது விசாரணை நடத்த வேண்டுமானால், அதற்கு மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
