வெளிநாட்டு நிதி மசோதாவை ஆராய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பு

– சிறப்பு நிருபர் –

வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா – 2026ஐ ஆய்வு செய்ய, பா.ஜ., லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில், 31 பேர் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமைத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார் .

தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதையும், பயன்படுத்துவதையும் முறைப்படுத்த, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், இந்த மசோதா அறிமுகம் நிறுத்தப்பட்டது.

ஒரு அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நிதி உதவி மூலம் அந்த அமைப்பு வாங்கிய சொத்துக்கள், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரம் பெற்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு செல்லும்.

இதற்கு வழிவகுக்கும் சட்டப் பிரிவுகளுடன் கூடிய திருத்தங்களை, பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, விரிவான ஆய்வுக்காக, இந்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவை ஆய்வு செய்ய, பா.ஜ., லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில், 31 பேர் அடங்கிய பார்லி., கூட்டுக்குழுவை அமைத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இதில், 21 லோக்சபா எம்.பி.,க்கள், 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டுக்குழு, பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, தன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள் 1 புதிய திருத்தத்தின்படி, வெளிநாட்டு நிதிகள் நம் நாட்டின் நலன், உள்நாட்டு பாதுகாப்பு அல்லது பொது அமைதிக்கு பாதகமாக அமைவதை தடுப்பது. 2 அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற, அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்குவது; இந்த பதிவு, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; அதன்பின், புதுப்பிக்க வேண்டும். 3 நிறுவனங்கள், அனைத்து வெளிநாட்டு பங்களிப்புகளையும், டில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட ஒரே கணக்கின் மூலமாக மட்டுமே பெற வேண்டும். 4 நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு நிதியில், 20 சதவீதத்துக்கு மேல், நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தக்கூடாது. 5 குறைந்தபட்சம் 80 சதவீத நிதியை, தங்களின் முதன்மை அறக்கட்டளை அல்லது செயல்பாட்டு நோக்கங்களுக்காக மட்டுமே செலவிட வேண்டும். 6 எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஊடகத் துறையினர், வெளிநாட்டு பங்களிப்புகளை பெற தடை. 7 சமூக, கல்வி, சமயம், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட பிரிவுகளின் செயல்பாடுகளின் கீழ் மட்டுமே அனுமதி.

Source link