நமது நிருபர்
நேபாளத்தில் கடந்த ஆக., 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில், தமிழகத்தை சேர்ந்த 305 பேர் சிக்கினர். அவர்களில், 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், 84 பேரை காணவில்லை. அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் கிடைக்காமல் உள்ளது.
தமிழக அரசின் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு, நேபாள தலைநகர் காத்மண்டுவில், 50 நாட்களுக்கும் மேல் முகாமிட்டு, தமிழர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில், நேபாளத்தில் காணமால் போனவர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளை, நேபாள அரசிடம் தமிழக அரசு வழங்கியது.
நேபாள அரசிடம் இருந்து, தற்போது வரை காணாமல் போன தமிழர்கள் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என, அதிகரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், நேபாளத்தில் முகாமிட்டு இருந்த தமிழக அதிகாரிகள் குழு சென்னை திரும்பியது. அந்த குழுவினர், தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
நேபாளத்தில் மாயமானவர்களின் உறவினர்கள் ஏதேனும் தகவல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், அயலக தமிழர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையை தினமும் தொடர்பு கொள்கின்றனர்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர். இதுவரை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ, மாயமானவர்களின் உறவினர்களை சந்திக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
