புதுடில்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் குற்ற பின்னணி உடைய 1,405 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 191 பேருக்கான காரணங்களை அரசியல் கட்சிகள் வெளியிடவில்லை. இதில், 72 வேட்பாளர்களுடன் தமிழகம் முதலிடம் வகிப்பதாக, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
சமர்ப்பிப்பு
தேர்தலில், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காரணங்களை, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு 2020ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த காரணங்கள், வேட்பாளரின் தகுதி, சாதனைகள் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, வெறும் வெற்றி வாய்ப்பு அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் மட்டுமின்றி அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான கார ணம், குற்றப் பின்னணி இல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்காதது ஏன் போன்ற விபரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரமாண பத்திரத்துடன் சமர்ப்பித்து வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், அவ் வாறு தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏ.டி.ஆர்., அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள் ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:
கடந்த ஏப்ரலில் நடந்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மொத்தம் 8,848 பேர் போட்டியிட்டனர். 31 அரசியல் கட்சிகள் சார்பில் 3,539 பேர் களமிறக்கப்பட்டனர்.
விபரம் வெளியீடு
இவர்களில், 1,405 பேர் மீது குற்றப் பின்னணி வழக்குகள் உள்ளன. இவற்றில், 1,214 பேர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 191 பேருக்கான விபரங்கள் வெளியிடப் படவில்லை.
தகவல் வெளியிடப்படாத வேட்பாளர்களின் எண்ணிக்கையில், 72 பேருடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தாக, மேற்கு வங்கத்தில் 55 பேருக்கான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கேரளா மூன்றாவது இடத்திலும், புதுச்சேரி நான்காவது இடத்திலும், அசாம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில், பா.ஜ., – அ.தி.மு.க., – தி.மு.க., – த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளில், வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியான காரணங்களை பயன்படுத்தியிருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
