காவல் நிலையத்தில் (போலீஸ் ஸ்டேஷன்) ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற வழக்கில், மூத்த காவல்துறை அதிகாரி (போலீஸ்) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சந்தேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சாலையில் கண்டெடுத்த ரூ.10,000 மதிப்புள்ள ரெட்மி மொபைல் போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அப்போது, பணியிலிருந்த மூத்த காவல்துறை அதிகாரி பைஜு (41), அந்த மொபைல் போனைப் பெற்றுக்கொண்டு, காவல் நிலையப் பொது டைரியில் முறைப்படி பதிவு செய்து, மேஜை டிராயரில் வைத்துள்ளார். பின்பு, அந்த போன் காணாமல் போனது.
இதனிடையே, போனை தவறவிட்ட சுபத்ராவின் மகன் போனை தேடிக் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, போன் காணாமல் போனதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, காவல்நிலைய பதிவேட்டை சரிபார்த்த போது, சம்பந்தப்பட்ட போன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அந்த போனை பெற்றுக்கொண்ட அதே காவல்துறை அதிகாரி தான் அந்த போனை திருடி விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பாதுகாப்புப் பணியிலிருந்த போது, அந்த போனை பெற்றுக்கொண்டு டைரியில் பதிவு செய்த அதே காவல்துறை அதிகாரி, போனை ரகசியமாகத் திருடி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1500 க்கு விற்றுள்ளார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரியே காவல்நிலையத்தில் உள்ள பொருளைத் திருடியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
