பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடர் பேட்டிங் சரிவுக்கு அந்த நாட்டில் இருந்து தரமான இளம் பேட்ஸ்மேன்கள் உருவாகாததே முக்கிய காரணம் என முன்னாள் வீரரும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வசீம் அக்ரம் கவலை தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷியை சுட்டிக்காட்டிய அக்ரம்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் உருவாகவில்லை என அக்ரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்தத் தொடரில் இருந்து தேசிய அணிக்காக சிறப்பாக விளையாடும் தரமான பேட்ஸ்மேன்கள் எத்தனை பேர் உருவாகியுள்ளனர் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் வெறும் 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்க்கும் வகையில் வளர்ந்திருப்பதை குறிப்பிட்ட வசீம் அக்ரம், “வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு பேட்ஸ்மேனை நாம் உருவாக்கியுள்ளோமா?” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்து தொடரிலும் பேட்டிங் தடுமாற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையை விமர்சித்துள்ள அவர், அணியின் பேட்டிங் வரிசையில் நிலைத்தன்மையும், தரமான தொழில்நுட்பமும் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சந்தித்து வரும் பின்னடைவுகள், அந்த நாட்டின் கிரிக்கெட் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர்களை உருவாக்கும் முறையில் மாற்றம் தேவை என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.
கிளப் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தேவை
பாகிஸ்தானில் அடிமட்ட அளவிலான கிளப் கிரிக்கெட்டை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வசீம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். இளம் வீரர்களுக்கு போதுமான போட்டி அனுபவம் கிடைப்பதுடன், நீண்டகால திட்டமிடலுடன் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.
பி.எஸ்.எல் போன்ற பெரிய டி20 தொடர்கள் நடத்தப்பட்டாலும், அதிலிருந்து சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து உருவாகாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள வசீம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு அடித்தள கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
