வையாபுரி வைத்த கோரிக்கை; 2 நாட்கள் ஷூட்டிங் வராமல் மட்டம் போட்ட கார்த்திக்: 90எஸ் சம்பவம்

நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு சரியாக வராமாட்டார் என்று சமீபத்தில் இயக்குனர் பாரதி கண்ணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,தனக்காக 2 நாட்கள் கார்த்திக் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு வரவில்லை என்று நடிகர் வையாபுரி கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன். 1981-ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள கார்த்திக், கடைசியாக 2018-ம் ஆண்டு தனது மகன் கௌதம் கார்த்திக்குடன் இணைந்த மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் நடித்திருந்தார். 

அதன்பிறகு பிறகு கார்த்தி நடித்த தேவ், பிரஷாந்த் நடித்த அந்தகன் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த கார்த்திக், 2023-ம் ஆண்டு தீ இவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது நடிப்பில் இருந்து ஒய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் பாரதி கண்ணன், அளித்த ஒரு பேட்டியில் நடிகர் கார்த்திக், அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, ஷூட்டிங் வரமாட்டார் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் வையாபுரி, கார்த்திக் தனக்காக 2 நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவில் பேசிய வையாபுரி, நவரச நாயகன் கார்த்திக், அவர் அடிக்கடி ஷூட்டிங் வரமாட்டார் என்று சொல்வார்கள். ஆனால் எனக்காக 2 நாட்கள் ஷுட்டிங் வராமல் இருந்துள்ளார். அரிச்சந்திரா தான் நான் அவருடன் இணைந்து நடித்த முதல் படம்.

அரிச்சந்திரா படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். எங்கே என்னை பார்த்தால், வைஸ் வைஸ் என்று சிரித்துக்கொண்டே இருப்பார். நான் வளர்ந்து வரும் நேரத்தில் நிறைய படங்கள் ஷூட்டிங் போவேன். அப்போது கார்த்திக் சார் படத்திலும் நடிப்பேன். அந்த சமயத்தில் மதியம் வேற ஷூட்டிங் இருந்தால் காலையில் கார்த்திக் சாரிடம் சென்று, மதியம் வேற ஒரு ஷூட்டிங் இருக்கு. 2 மணிக்கு மேல், 2 நாட்கள் இருக்கு என்று சொன்னேன். அப்போது அவர் 1 மணிக்கே நான் போய்விடுகிறேன். அதன்பிறகு நீங்கள் போய்விடுங்கள் என்று சொன்னார்.

அதன்பிறகு அடுத்த நாள் என்னை அழைத்து வைஸ் நாளைக்கு அங்கு ஷூட்டிங் இருக்கா என்று கேட்டார். நான் இருக்கு என்று சொன்னவுடன், நாளைக்கு நான் லீவு நீங்க ஃபுல்லா எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். பல தயாரிப்பாளர்கள் அவர் ஷூட்டிங் வரவில்லை என்று காத்திருந்து கடும் கோபத்தில் இருப்பார்கள். ஆனால் அவர் வந்தவுடன் சிரித்துக்கொண்டே ஹாய் என்று சொல்லிவிட்டால், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோபம் பறந்தே போய்விடும் அவரிடம் ஒன்றுமே கேட்க முடியாது என்று வையாபுரி கூறியுள்ளார். 



Source link