ஸ்ரீதர் வேம்புவின் ‘ஸோஹோ’ கம்பெனிக்காக நெடுஞ்சாலை சிக்னல் இடம் மாற்றி அமைக்க முயற்சி நடைபெறுவதாக சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மண்டல அதிகாரி வீரேந்தர் சம்ப்யாலை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், “தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கம் தேசிய நெடுஞ்சாலை NH 32 வில் மறைமலைநகர் நகராட்சி 1-வது வார்டில் தைலாவரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி புவனேஸ்வரி அம்மன் நகர், வள்ளலார் நகர், மற்றும் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள், குடும்பங்கள் உள்ளன. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் குந்தைகள்- மாணவர்கள், பணிகளுக்கு செல்வோர், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை கடக்க சிக்னல் யு- வளைவு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) பிரமுகரும், தற்போதைய ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவாளருமான திரு.ஸ்ரீதர் வேம்பு அவர்களின் ஸோஹோ (Zoho Corporation) நிறுவனம் Estancia IT Park, Plot No. 140 & 151, GST Road, Vallancheri, Chengalpattu District-603 202 முகவரியில் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசை ஆளும் அரசியல் பிரமுகர் திரு.ஸ்ரீதர் வேம்பு தனது செல்வாக்கை பயன்படுத்தி, பல ஆயிரக்கணக்கான சாதாரண ஏழை-எளிய பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை, தொந்தரவை ஏற்படுத்தும் விதமாக, தனது சொந்த நிறுவனத்திற்கு வசதியாக தற்போது சிக்னல் வளைவு இருக்கும் இடத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிய வருகிறோம்.
இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தற்போது மேற்சொன்ன பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் யு-வளைவு சிக்னல் இருக்கும் இடத்தை அடைத்துவிட்டு, தனது ஸோஹோ நிறுவனத்தின் சொந்த பயன்பாட்டிற்காக அந்நிறுவனத்தின் பிரதான வாயில் நேராக தேசிய நெடுஞ்சாலையில் யு-வளைவு சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிக்னல் பகுதியை பயன்படுத்தி வரும் குடியிருப்புவாசிகளிடமோ, அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளிடமோ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருத்து ஏதும் கேட்காமல் ஸோஹோ கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக அனுமதி அளித்திருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு தற்போது இருக்கும் சிக்னல் வளைவு ஸோஹோ நிறுவனத்தின் வசதிக்காக மாற்றி அமைக்கப்பட்டால் தைலாவரம் பகுதியை சேர்ந்த மேற்சொன்ன ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்கும் துன்பத்திற்கும் உள்ளாவார்கள். குறிப்பாக செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்வோர் சுமார் 2 கி.மீ. தூரம் சென்றுதான் தைலாவரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிளுக்கு பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திரும்ப முடியும். மேலும், எதிர் திசையில் வரும் போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஆளும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கொடுக்கும் அழுத் தங்களுக்கு உள்ளாகாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது செயல்படும் சிக்னல் யு-வளைவு இடத்திலேயே தொடர்ந்து செயல்பட உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. தவறும் பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்படும் மக்களுடன் களத்தில் போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் மாற்றுப்பார்வை. பாரதி அண்ணா, செயற்குழு உறுப்பினர் தோழர் ஹரி கிருஷ்ணன் மற்றும் காட்டங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்துள்ளனர்.
