தனியார் வங்கி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை தனது முதன்மை தேர்வாக யு.பி.எஸ்., தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஹெச்.டி.எப்.சி., வங்கியில் சாதகமான இடர் – வருவாய் வாய்ப்பு இருப்பதாகவும், ஆக்சிஸ் வங்கிக்கும் வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த மூன்று வங்கிகளுக்கும் ‘வாங்கலாம்’ என்ற பரிந்துரையை யு.பி.எஸ்., வழங்கியுள்ளது. இதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னுரிமை தேர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 3 – 4 ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை கிளை வலையமைப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன. வங்கிகள் இடையே டிபாசிட்களை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்த கிளை விரிவாக்கம் முக்கியமானதாக மாறியுள்ளது.
பரந்த கிளை வலையமைப்பு வாயிலாக வங்கிகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையவும், டிபாசிட்களை திரட்டவும், கடன் வழங்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் முடியும்.
இதன்வாயிலாக, நீண்டகாலத்தில் டிபாசிட் மற்றும் கடன் சந்தையில் தனியார் வங்கிகளின் பங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், கடந்த காலத்தில் பொதுத்துறை வங்கிகளு க்கு சாதகமாக இருந்த சுழற்சி சார்ந்த காரணிகள் குறைய தொடங்கினால், தனியார் வங்கிகளின் நிலை மேலும் வலுப்பெறலாம்.
ஜூலை 2026ல் மேற்கொண்ட கடன் தகவல் நிறுவனங்களின் தரவு ஆய்வில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சொத்து தரம் ஒட்டுமொத்தமாக சீராக இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், குறைந்த மதிப்பிலான கடன்கள் வழங்கப்படும் சில பிரிவுகளில் தொடர்ந்து அழுத்தம் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.

