காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, இதுவரையில் 1,250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4,500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி 10வது நாளாக தொடர்ந்து வருகிறது. அதேபோல, திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான ஊழியர்களின் நிலையும் என்னவென்று தெரியவில்லை. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 12 சுரங்க திட்டப்பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் சுமார் 900க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
நேற்று சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாள ராணுவம் மற்றும் தென்கொரியாவின் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு பணியில், அந்த நபர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. சுரங்கத்திற்கு உள்ளே சுமார் 225 மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்ட நபர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, நுவாகோட் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சந்திகா ஸ்ரேஷ்தா என்ற 64 வயது மூதாட்டியை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். போர்வையில் சுற்றியபடி மீட்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
